சாதன சதுஷ்டய சம்பத்தி - 1


சாதன சதுஷ்டய சம்பத்தி
விவேகம்

விவேகம் என்ற சொல்லுக்குப் பின் வரும் பொருள்கள் உண்டு.
(1) ப்ருதக்த்வேன ஞானம் – பிரித்துப் புரிந்து கொள்ளுதல்
பிரித்துப் புரிந்து கொள்ளுதல் எனும் போதே இரண்டு முற்றிலும் வேறான பொருட்கள் கலந்திருக்கின்றன என்று அர்த்தம்.
(2) விஷேஷ ரூபேண ஞானம் – தெளிவாகப் புரிந்து கொள்ளுதல்.
(3) அன்யோன்ய தர்ம (அ) வ்யாவர்த்த ரூபேண ஞானம் – ஒரு விதமான வஸ்து மற்றொன்றுடன் கலந்து விடாமல் புரிந்து கொள்ளுதல்.
(4) விசாரம் – ஆராய்தல்
(5) சத்வ சுத்தி: - மனத்தூய்மை.

வேதாந்தம் என்பது ஒரு கண்ணாடியைப் போல. அந்தக் கண்ணாடி முன் நின்றால் அதுநம் மனதையும், அதற்கு ஆதாரமாய் இருக்கும் தத்துவத்தையும் காட்டும்.
அந்தக் கண்ணாடி முன் நிற்கையில் நமக்கு ஒரு சுய அறிவு வேண்டும்.
ஒரு ஸ்லோகம் சொல்கிறது. இரு கண் அற்றவர்க்குக் கண்ணாடி எவ்விதம் உதவும்?யாருக்கு சுய அறிவு இல்லையோ அவனுக்கு சாஸ்திரம் எவ்விதம் உதவும்?
அந்த சுய அறிவே விவேகம், சுயம் ப்ரக்ஞா எனப்படுகிறது.

தர்க்க சாஸ்திரம் மனதில் தோன்றும் ஒவ்வோர் எண்ணத்தையும் ஞானம் என்கிறது.
அதிலும் யதார்த்த ஞானம் மற்றும் அயதார்த்த ஞானம் என்று இருவிதமான ஞானம் உண்டு.எவ்விதம் பொருள் உள்ளதோ அவ்விதமே தோன்றும் எண்ணத்துக்கு யதார்த்த ஞானம்என்று பெயர். வெளியில் ஒரு பொருள் இருக்க, மனதில் வேறு எண்ணம் தோன்றினால்அதற்கு அயதார்த்த ஞானம் அல்லது விபரீத ஞானம் என்று பெயர்.
எனவே யதார்த்த ஞானத்துடன் இருத்தலே விவேகம் என்ப்படுகிறது.

விவேகத்தின் லக்ஷணம்
நித்ய அநித்ய வஸ்து விவேக:
எது நிலையானது, எது நிலையற்றது என்பது பற்றிய அறிவு விவேகம் எனப்படும்.
நிலையான மற்றும் நிலையற்ற இரண்டு முற்றிலும் வேறான பொருட்கள்
கலந்திருக்கின்றன. அவ்விரு பொருட்கள், ஜடமான உலகமும், உணர்வு சொரூபமான ப்ரம்மமும் ஆகும்.
ப்ரம்மம் நித்யமானது, உலகம் அநித்யமானது என்ற அறிவே விவேகம்.
இந்த அறிவின் அடிப்படையிலேயே பிற குணங்கள் உருவாகும். எனவே இதுவேவேதாந்தத்தின் முதல் படியாகவும், பிற மூன்று குணங்களுக்கும் விதையாகவும் அமைந்துள்ளது.
விவேகம் என்ற அறிவை நாம் இவ்வுலக வாழ்விலிருந்தே பெற வேண்டும்.
இவ்வுலக வாழ்வு நமக்கு விவேகத்தைக் கொடுத்திருந்தால் நாம் இவ்வுலகை நன்குபயன்படுத்தியிருக்கிறோம் என்று பொருள். எனவே நன்றாக விவேகம் வந்தவுடன் உலகை விட்டு விடுவோம்.

விவேகத்தின் மூலம் உலகின் மீது நமக்கு என்ன விதமான பாவனை ஏற்படும்?
உலகப் பொருட்களிடமிருந்து விலகும் தன்மை.
உலகின் அனைத்துப் பொருட்கள் மீதும் வைராக்யம் (பற்றற்ற தன்மை) எனும் பாவனை.
நித்யமான பொருளை அடையும் விருப்பம்.
உலகில் மேற்கொள்ளப்படும் செயல்கள் அனைத்தும் சாதனையேயன்றி சாத்யமில்லைஎன்கிற தெளிவு.

எந்த உபாயத்தின் மூலம் நிலையானது, நிலையற்றது பற்றிய அறிவு அடையப்படும்?
1. சாஸ்திரம் அல்லது ஸ்ருதி என்று அழைக்கப்படும் வேதாந்தம் அல்லது உபநிஷத்.
2. ஸ்ருதி சம்மத தர்க்கம் – உபநிஷத்துகளை மையமாகக் கொண்டு விளக்கும் தர்க்கம்.
3. கேவல தர்க்கம் – சுய அறிவைக் கொண்டு சிந்தித்தல். உ– ம். எதெல்லாம்
உறுப்புகளுடன் கூடியதோ அதெல்லாம் அழிவுக்குரியது.
4. அனுபவப் ப்ரமாணம் – நம் மற்றும் பிறரது அனுபவங்கள்.

இதில் அனுபவம் என்பது ஆராய்ந்து பார்க்கப்பட்டால் மட்டுமே அறிவைக் கொடுக்கும்.
ஆராய்ந்து பார்க்கப்படாத அனுபவம் விருப்பு, வெறுப்புகளையே வளர்க்கும்.

அனுபவத்தை ஆராய்ந்து பார்க்கும் மனதை அடைதல் எவ்வாறு?
மனதை சாத்விக குணப் ப்ரதானமான மனதாக மாற்ற வேண்டும்.
சாத்விக மனமே அனுபவத்தை ஆராயும் தன்மை கொண்டது.
சாத்விக மனம் அறிவைக் கொடுக்கும்.
ராஜஸ மனம் விருப்பு, வெறுப்பைக் கொடுக்கும்.
தாமஸ மனம் சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும்.

மனதை சத்வ குணப் ப்ரதானமாக மாற்றுவது எப்படி?
கீதையில் பகவான் சாத்விக குணம் சம்பந்தமான விஷயங்களைக் கூறுகிறார்.
அவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பயில வேண்டும்.
சாத்விக குணங்களாவன: சாத்விக பூஜை, சாத்விக ஸ்ரத்தை, சாத்விக ஆஹாரம் முதலியன.
ஸ்வாமி சித்பவானந்தரிடம் ஒரு முறை சாத்விக ஆஹாரம் பற்றிக் கேட்டதற்கு, “அளவாய்ச் சாப்பிட்டால் அது சாத்விக உணவு” என்றார்.
எனவே எந்தச் செயலுமே அளவுடன் இருந்தால் அது சாத்விகம் என்று அறிந்து கொள்ளலாம்.
விவேகத்தினால் விளையும் பலன் என்ன?
உலகம் நிலையற்றது என்ற அறிவால், இவ்வுலகின் மீது வைராக்யம் என்ற பாவனை ஏற்படும். எனவே வைராக்யம் என்ற அடுத்த குணத்துக்கு விவேகமே விதை.
நிலையான பொருளான பரமாத்மாவை அடைய வேண்டும் என்கிற ஆர்வம் –
முமுக்ஷுத்வம் – ஏற்படும்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை