இ20 –உலகக் கோப்பை 2010 – தொடர்ந்து பொய்யாக்கப்படும் எதிர்பார்ப்புகள்










இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2010க்கான 20-20 உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. கிரிக்கெட் என்ற ஜென்டில்மேன் விளையாட்டைக் கண்டுபிடித்த நாடு ஒரு உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதற்கு இத்தனை வருடங்கள் பிடித்தது ஆச்சரியம்தான். உலகக் கோப்பைப் போட்டிகளின் தொடக்கத்தில் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்று யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. கே.பி. ஒருவரைத்தவிர நட்சத்திர அந்தஸ்து கொண்ட வீரர்கள் இல்லாத இங்கிலாந்து அணியின் பலம் இம்முறை அவர்களின் துவக்கப் பந்துவீச்சு மற்றும் களப்பணி (அதாவது ஃபீல்டிங்). ரயன் சைட்பாட்டம், ப்ராட் அப்புறம் இன்னொருத்தர் பேர் ஞாபகம் வரமாட்டேனென்கிறது. சுழல் பந்து வீச்சு கிலோ என்ன விலை என்று கேட்கிற அணியின் ஸ்வான் கூட நன்றாக வீசுகிறார். இறுதிப் போட்டியில் முதல் பத்து ஓவர்களின் நாற்பத்துச் சொச்சம் ரன்களை மட்டுமே கொடுத்தார்கள். அடுத்த பத்தில் நூறு ரன்கள் ஒழுகின. (அதுதான் ஆஸ்திரேலியா)
துவக்க ஆட்டக்காரர்கள் கீஸ்வெட்டெர் மற்றும் லம்(ப்) இருவருமே நன்றாக ஆடுகிறார்கள். க்ளார்க்கை அவுட்டாக்க காலிங்வுட்டின் ஒரு கேட்ச் இன்னும் மனசிலேயே நிற்கிறது. ஆங்கிலேய அணி மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள். ஆஸ்திரேலிய அணியினர் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்து ஆடவில்லை என்று ஒத்துக் கொள்வதற்காகவாவது இந்த மாதிரித் தோல்விகள் அவர்களுக்குத் தேவை.




பெண்கள் அணியின் உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவிற்கு. அசத்தலான நகம் கடிக்கும் முடிவு. கிவி வீராங்கனைகள் உயிரைக் கொடுத்துப் போராடினார்கள். கடைசி பந்தில் ஐந்து ரன் வித்தியாசத்தில் தோற்றனர். வெறும் நூற்றுச் சொச்ச ரன்களை மட்டுமே எடுத்து அதை வெற்றிகரமாகப் பாதுகாத்தது ஆஸி. இரு அணியினரின் களப்பணியும், இந்திய (ஆண்கள்) அணியினுடையதைவிடச் சிறப்பாக இருந்தது. ஆஸி அணித்தலைவர் மைக்கேல் க்ளார்க் தலைமையில் எல்லா ஆஸி ஆண் வீரர்களும் பெண்கள் இறுதிப் போட்டியைப் பார்த்து நகம் கடித்தனர்; தலைமேல் கை வைத்தனர்; துள்ளிக் குதித்து உற்சாகத்தை பகிர்ந்து கொண்டனர்.
எனக்கென்னமோ இ20 உலகக் கோப்பை வருடத்திற்கொருமுறை வருவது சரியாகப்படவில்லை. கிரிக்கெட்டை அழகான நிலையற்ற தன்மைகளின் விளையாட்டு என்பார்கள். அது இ20ல் மிக அதிகம். கோப்பை வாங்கி ஒரு பிறந்தநாள் கொண்டாடுவதற்குள் அந்த மகிழ்ச்சியை இன்னொரு அணி பறித்து விடுகிறது. குட்டி அணிகளுக்கெல்லாம் இ20லாவது பெரிய அணிகளுடன் ஆடும் வாய்ப்பு கொடுக்கப் பட வேண்டும். நாலு வருடத்துக்கொருமுறை 24 அணிகளுடன் ஆடினாலென்ன?
இந்திய அணி எல்லாரும் எதிர்பார்த்த மாதிரியே விளையாடியது. சூப்பர் 8 ல் நல்ல வேளை மூன்று போட்டிகள்தான். மூன்றிலும் தோல்வியை தழுவியது. தோனியின் செல்லப் பிள்ளைகளான மணிக்கட்டு கழண்டு போன யுவராஜ், உள்ளூர்ப் புலி யூசுஃப், திடீர் நட்சத்திரம் விஜய், அனைவருமே அவரை ஏமாற்றிவிட்டனர். அணிக்குள் வந்ததிலிருந்து நன்றாக பந்து வீசிக்கொண்டிருந்த ஜடேஜா பலிகடா ஆனார். ஐ.சி.சி விருது வாங்கின காம்பீர் தடுமாறியதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ரன் எடுக்க வேண்டும் என்பதைவிட, தனக்கு ஷார்ட்பிட்ச் பந்தை ஆடத்தெரியும் என்று பிறருக்கு நிரூபிக்க வேண்டுமென்பதற்காகவே ஆடியதைப் போலிருந்தது. ராய்னா நன்றாக ஆடினார். மற்றவர்கள் மதுபான விடுதியில் ரகளை செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு வருடத்தில் சில ஒருநாள் போட்டிகளை மட்டுமே அதுவும் வேற்று நாட்டில்தான் ஆட முடிகிற பாகிஸ்தான் மூன்று உலககோப்பை அரையிறுதிப் போட்டிகளுக்கும் தேர்வாகியிருக்கிறது.
முதல் கோப்பையையே கைப்பற்றிய கிரிக்கெட் வல்லரசான இந்தியா, கடந்த இருஆண்டுகளிலுமே சொதப்பிக் கொண்டுதான் இருக்கிறது. அதனாலென்ன? இந்தா, அப்பாவி ஜிம்பாப்வே இருக்கிறது, ஆசிய கோப்பை இருக்கிறது. அப்புறம் டெஸ்ட் தகுதியைக் காப்பாற்றிக் கொள்ள ஆஸ்திரேலியாவை வேறு அழைத்திருக்கிறோம். அதெல்லாம் சீக்கிரம் மறந்து போய் விடும்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை