விடுதலையின் இச்சை


ஆத்ம ஞானம் தேடும் ஒரு சாதகனின் தகுதிகளில் முதலில் வைராக்யம், விவேகம், சமம், தமம் இவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக உபரமம் அல்லது உபரதி என்ற பண்பு விளக்கப்படுகிறது.  இது கர்மத்தியாகம். சங்கல்ப பூர்வமான கர்மங்களையும், சில பொறுப்புகளையும் விட்டு விடுதலையாவதை இப்பண்பு வலியுறுத்துகிறது. இதன் மூலம் ஞான யோகப் பயிற்சிக்கான, சிரவணத்துக்கான காலத்தை நாம் சம்பாதிக்கிறோம். உபரதி என்ற பண்பு, சமம் மற்றும் தமம் ஆகிய பண்புகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருதலையும் குறிக்கும். உள், வெளி விஷயங்களிலிருந்து திரும்பி அப்படியே இருத்தல் மேலான உபரதி: என்று அபரோக்ஷ அனுபூதி குறிப்பிடுகின்றது.

நமக்கு நேரும் எல்லா துக்கங்களையும் வெறுப்பின்றி சகித்துக் கொள்ளுகிற சகிப்புத்தன்மை அல்லது பொறுமை என்ற தன்மையை திதிக்ஷா என்ற பண்பு வலியுறுத்துகிறது. நாம் விரும்பாத ஒன்று நடக்கும் போது அதை மாற்றுவதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும். அப்படியும் அந்த நிலையை மாற்ற முடியவில்லையென்றால், வரும் விளைவுகளை குறை சொல்லாது ஏற்றுக் கொள்ளவேண்டும். நமக்கு விருப்பமான ஒன்றை அடையும் முயற்சியில் எந்தத் துன்பம் வரினும் இயல்பாகவே பொறுத்துக் கொள்வோம். எனவே திதிக்ஷா என்ற சகிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் எனில் மோக்ஷத்தை அடையும் இச்சையான முமுக்ஷுத்துவத்தை அதிகரிக்க வேண்டும். நமக்கு வரும் துன்பங்கள், துயரங்கள் இவற்றைக் கண்டுகொள்ளாதிருக்க வேண்டும். எதை நாம் பொருட்படுத்துவதில்லையோ அதற்கு மெய்த்தன்மை குறைகிறது. துன்பங்கள் வரும் போது அவற்றைப் பொறுமையுடன் பழகப் பழக அவற்றின் பாதிப்பு குறையும். வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பமே துன்பம் வந்து விடுமோ என்ற பதற்றம் கலந்த எதிர்பார்ப்புதான். திதிக்ஷா உடையவருக்கு இந்த பதற்றம் இருக்காது. உலக வாழ்க்கையின் வெற்றிக்கே திதிக்ஷா மிக அவசியம். நாம் இந்த மனித சரீரம் எடுத்திருப்பதே முற்பிறவிகளில் நாம் செய்த புண்ணியம் பாதி, பாவம் பாதி இவற்றின் சேர்க்கையின் விளைவாகத்தான். எனவே புண்ணியத்தின் பலனான சுகமும், பாவத்தின் பலனான துக்கமும் எப்படியும் வந்தே தீரும் என்ற தெளிவு இருந்தால் திதிகக்ஷையை எளிதில் பின்பற்ற முடியும்.
          ஸ்ரத்தா என்ற அடுத்த பண்பு குரு, வேதம் இவற்றின் மீதுள்ள பக்தியே ஆகும். வேதாந்தம் என்பது ஒரு பிரமாணம் ஆகும். அதாவது வேதாந்தம் என்ற கருவியின் உதவி கொண்டுதான் நாம் உண்மையை அறியவிருக்கிறோம். அக்கருவியை உபயோகப்படுத்தும் ஆசிரியரே குரு. வேதாந்தத்தையும், ஆசிரியரையும் பிரிக்க இயலாது. பிரித்தால் உண்மையை அறிய இயலாது. ஸ்ரத்தை எதனால் தேவை? அனுபவத்துக்கு முன்னால் இருக்கும் ஒரு படியே நம்பிக்கை. அனுபவத்துக்கு முற்றிலும் எதிராக இருக்கும் ஒரு கருத்தைக் கேட்டு, நம் அனுபவத்தைச் சரி செய்து, வேதம் சொல்லும் வாக்கியம்தான் உண்மை என்று உணரும் வரைப் பயணம் செய்ய, ஸ்ரத்தையே துணை புரியும். மனதில் சரியான அறிவு இருந்தும் அந்த அறிவில் நம்பிக்கை இல்லையென்றால் அது உண்மையில் ஞானமே அல்ல. எனவே ஸ்ரத்தையே இறுதியில் ஞானமாக மாறுகிறது.
          உபநிஷத் ஈஸ்வரனிடமிருந்தே வந்தது என்ற புத்தியை வளர்த்தலும், வேதத்தின் மேலும், ஆச்சாரியார் மேலும் உள்ள சந்தேக புத்தியை நீக்குதலும் ஸ்ரத்தையை வளர்க்க உதவி செய்யும். ஸ்ரத்தை நாம் செய்த புண்ணியத்தின் பலன். ஸ்ரத்தையை வளர்க்க தர்மப்படி வாழ வேண்டும்.
          அடுத்த பண்பு சமாதானம். மனதை முழு முயற்சியுடன் சத் காரியத்தில் குவித்திருத்தல் சமாதானம் ஆகும். இது மன உறுதியைக் குறிக்கிறது.
          தியானமும், மீண்டும், மீண்டும் மனதை ஒரே விஷயத்தில் பொருத்திப் பழகுதலும் சமாதானம் என்ற பண்பை வளர்க்க உதவும். முதலில் சமாதானம் சிரவணத்திலும், பிறகு நிதித்யாசனத்திலும் இருக்க வேண்டும்.
          இறுதியாக முமுக்ஷுத்துவம். நான் பந்தத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற தீவிர இச்சை பிரதானமாக இருத்தலே முமுக்ஷுத்துவம் எனப்படுகிறது. அதுதான் நமது பிரதான லட்சியம் என்று முடிவு செய்த பிறகு அதற்காக சகல விஷயங்களையும் தியாகம் செய்வதற்காகத் தயாராக இருக்க வேண்டும். சம்சாரம் என்றழைக்கப்படுகிற மனதின் நிறைவின்மையிலிருந்து நான் எப்போது விடுதலையடைவேன் என்ற எண்ணம் உறுதியாக இருக்கும் நிலையே முமுஷுத்துவம் எனப்படுகிறது.
          இத்துடன் சாதகனின் தகுதிகளான சாதன சதுஷ்டய சம்பத்தி நிறைவடைகிறது. இப்பண்புகளை அடைந்தவுடன் மனத்திருப்தி அடைந்து விடாமல் மேலும் தொடர்ந்து விசாரம் செய்ய வேண்டும். ஞானயோக விசாரம் பற்றி மேலும் விரிவாகக் காண்போம்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை