முள்


பத்து வயதில் என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பள்ளிப்பருவத்தில் கோடை விடுமுறைக்கு எங்கள் தாத்தா வீட்டுக்குச் செல்வது வழக்கம். எங்கள் தாத்தா திரையரங்கு ஒன்றின் மேலாளராக இருந்தார். திரையரங்கை ஒட்டி ஒரு பெரிய கோடவுன் இருந்தது. வெள்ளாவி வைத்து வேக வைத்த நெல்லை கோடவுனில் பரப்பிக் காயப் போடுவார்கள். கோடவுனிலேயே தங்கி நெல் காய வைத்தது ஒரு குடும்பம்.நெல் காயப் போடாத சமயங்களில் காலியாகக் கிடக்கும் கோடவுன் எங்களது விளையாட்டு மைதானமாக மாறிவிடும். கிரிக்கெட், ஹாக்கி, கிட்டிப்புள் என்று மனதுக்குத் தோதான விளையாட்டுகளை ஆடுவோம்.என் வாழ்க்கையில் நான் ஹாக்கி மட்டையைத் தொட்டிருக்கிறேன் என்பதை நினைத்து எனக்கு இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. முதல் முறை ஹாக்கி விளையாடியபோது பந்தை அடிப்பதற்கு பதிலாக பக்கத்து வீட்டு நந்தகோபாலின் பல்லை உடைத்து விட்டேன். அவன் வாயெல்லாம் ரத்தம். நல்லவேளை. பல் மீண்டும் வளர்ந்து விட்டது.
ஒருமுறை நானும் என் தம்பியும் காலியாக இருந்த கோடவுனில் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நான் அடித்த பந்து கோடவுன் காவலாளியின் வீட்டுக்குள் சென்று விட்டது. காவலாளியின் மனைவி கோபத்தோடு வெளியே வந்து எங்களைப் பார்த்துக் கத்தினாள். பந்தை எடுத்துக் கொண்டு தரமுடியாதென்று சொல்லி விட்டாள்.கோடவுனை விட்டு உடனே வெளியேறும் படிக்  கூறினாள். நாங்கள் எவ்வளவோ கெஞ்சியும் அவளிடமிருந்து பந்தைப் பெற முடியவில்லை. கோபத்தோடும், வருத்தத்தோடும் அங்கிருந்து வெளியேறினோம். வெளியில் என் தம்பி தன் பையிலிருந்து ஒரு சாவிக்கொத்தை எடுத்துக் காட்டினான். வெளியே வரும்போது அங்கிருந்து லவட்டிக் கொண்டு வந்து விட்டான் போலிருக்கிறது. எங்களுக்கு அவள் மீதிருந்த கோபத்தில் இந்த சாவிக் கொத்தை வைத்து அவளை என்ன என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டம் போட ஆரம்பித்தோம். அந்த சாவிக்கொத்து முக்கியமானதென்று அதன் அமைப்பிலிருந்தே புரிந்து விட்டது. கோடவுன் சாவி, காவலாளியின் வீட்டுச்சாவி, தியேட்டரிலிருந்து கோடவுனுக்கு வர இயலும் அவசர வழியின் கதவைத் திறக்கும் சாவி எல்லாம் அதில்தான் இருந்தன. எனவே அந்த சாவிக்கொத்து தொலைந்தால் அவள் பெரிய பிரச்னையில் சிக்கிக் கொள்வாள் என்று அனுமானித்தோம். நாலு தெரு தாண்டிச் சென்று அங்கிருந்த ஒரு பெரிய சாக்கடையில் அந்தச் சாவிக்கொத்தைப் போட்டுவிட்டோம்.
சாவிக்கொத்து காணவில்லை என்பதைக் கொஞ்ச நேரத்திலேயே கண்டுபிடித்து விட்ட காவலாளியின் மனைவிக்கு உடனேயே எங்கள் மீது சந்தேகம் வந்து விட்டது. எங்கள் வீடு முன் வந்து சாவியைத் தரச் சொல்லி காட்டாடம் ஆடினாள். சாவி எங்களிடம் இல்லவே இல்லையென்று சத்தியம் செய்தோம். அவள் நம்பவே இல்லை. முனியப்பன் கோயிலில் திருடினவன் உண்மையைச் சொல்லும் வரை ரத்த வாந்தி எடுத்து, வயித்தால போகுமாறு வேண்டிக் கொள்ளப் போவதாகச் சொன்னாள்.
அவள் சொல்வது நம்பக்கூடியதாகவும் இருந்தது; நம்ப இயலாததாகவும் இருந்தது. வயிற்றை எக்கி எக்கி ரத்த வாந்தி எடுக்கும் என் சித்திரம் என் முன் தோன்றியபோது எனக்குத் திகிலாக இருந்தது. என் தம்பி என்னைப் பார்த்த பார்வை என் எண்ணத்தை ஆமோதிப்பதைப் போலிருந்தது. இருவரும் அவசர  அவசரமாகக் கிளம்பி மேற்படி சாக்கடைக்குச் சென்று பெரிய குச்சி விட்டு கிளறினோம். நெடுநேரம் கிளறியும் சாவிக்கொத்து சிக்கவில்லை. எனக்குக் கிலி பிடித்து விட்டது. இருந்தும் என்ன செய்யபேசாமல் இருவரும் வீடு திரும்பினோம். ரத்த வாந்தி எடுக்கப் போகும் நாளுக்காகக் காத்திருந்தோம். அந்த நாள் இன்று வரை வரவே இல்லை. சாவிக்கொத்தைத் தொலைத்ததால் அந்தப் பெண்மணி என்ன பாடுபட்டாள், முதலாளியிடம் எப்படியெல்லாம் திட்டு வாங்கினாள் என்பதெல்லாம் புரிந்து கொள்ள முடியாத வயது. ஆனால் அந்தக் குற்ற உணர்ச்சி இன்று வரை என்னில் இருக்கிறது. குற்றமும் தண்டனையும் நாவலில் தோஸ்தோவஸ்கி தண்டனையாக இந்தக் குற்ற உணர்ச்சியைத்தான் குறிப்பிடுகிறார். சமீபத்தில் என் வகுப்பில் அவர்கள் வாழ்நாளில் தெரிந்தே செய்த தவறைப் பகிர்ந்து கொள்ளும்படிச் சொன்னேன். அப்போது இந்தச் சம்பவத்தை  அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். கொஞ்சம் மனம் லேசானதைப் போல் இருந்தது.

Comments

  1. எனவே அந்த சாவிக்கொத்து தொலைந்தால் அவள் பெரிய பிரச்னையில் சிக்கிக் கொள்வாள் என்று அனுமானித்தோம். நாலு தெரு தாண்டிச் சென்று அங்கிருந்த ஒரு பெரிய சாக்கடையில் அந்தச் சாவிக்கொத்தைப் போட்டுவிட்டோம்.

    ................................................

    // அடப்பாவிகளா...அப்பவே என்னா வில்லத்தனம்? எண்டா எண்டா உங்களுக்கு இந்த கொலை வெறி?

    ................................................























    # தான் செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பிற்கு பதிலாக தண்டனையை வேண்டுபவனும்...

    # பிறர் செய்யும் தவறுகளுக்கு தண்டனைக்கு பதிலாக மன்னிப்பை வழங்குபவனே...

    # வாழ்க்கையில் குற்ற உணர்வில்லாமல் வாழ்வான்.

    # அவனே விரைவில் வாழ்வின் எல்லா குற்றத்தில் இருந்தும் விடுபட்டு மிக உன்னத நிலையையும் அடைவான்.

    # கோழைகளால் நேர்மையாக வாழ முடியாது. அவர்களால் குற்ற உணர்வில் இருந்தும் விடு பட முடியாது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை