வாசிப்பின் பாதை



நேற்று என் பள்ளி நூலகத்துக்குள் நுழைந்தேன். சில ஆண்டுகளாக நூலகர்கள் இல்லாமலிருந்து இவ்வருடம்தான் கல்வி அமைச்சகம் இரு நூலகிகளை அனுப்பி வைத்திருக்கிறது. புத்தகங்களை வேலையாட்கள் உதவியோடு அடுக்கிக் கொண்டிருந்தனர் இருவரும். நான் எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கான புத்தகங்களைத் துழாவுவதைத் துவங்கினேன். பெரும்பாலும் நாவல்கள் வரிசைப் பக்கமே கண் செல்கிறது. பதின்பருவத்தில் வைரமுத்து, மு.மேத்தா கவிதைத் தொகுப்புகளைத் தேடியிருக்கிறேன். பிறகு நூலகத்திலிருந்து யாராலும் வாசிக்க விருப்பம் கொள்ளப்படாத தலையணை அளவு புத்தகங்களைக் கொண்டு வருதலும் பழக்கமாயிருந்தது. தத்துவம், சுயசரிதை, ஆன்மிகம் என்று கண்டு விட்டால் கைகள் பரபரக்கும். இப்போது நாவல்களே பெரிய கவர்ச்சியாயிருக்கின்றன.
          வரிசையாக ஒவ்வொரு நாவலாக எடுத்து அதன் பின்னட்டையில் கொடுக்கப்பட்டிருந்த கதைச் சுருக்கத்தை மட்டும் வாசித்து விட்டு வைத்தேன். பெரும்பாலான ஆங்கில நாவல்களில் இது ஒரு வசதி. பின்னட்டையைப் பார்த்து விட்டு வாசிக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம். உலகைத் தாக்கப்போகும் பேராபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றப் புகும் கதாநாயகன், மாயவாதிகள், ரத்தக் காட்டேரிகள், வாழ்வின் திசையையே மாற்றப் போகும் ரகசியங்கள் வெளிப்படும் அபாயங்கள் என சலிப்பூட்டும் டெம்ப்ளேட்களில் வார்த்தெடுத்த கதைகள். அபூர்வமாக ஓரான் பாமுக்கின் நாவல்கள், எ பியூட்டிஃபுல் மைண்ட் என்ற கணிதவியலாளன் ஒருவன் வாழ்வைச் சொல்லும் சரிதை, இந்தியர் ஒருவர் எழுதிய க்ளைவ் லேண்ட் என்ற நாவல் என தட்டுப்பட்டன. ஒரு முழு நூலகத்தில் இருந்து எனக்கு விருப்பமானதைப் போல் நாலைந்து புத்தகங்கள்தான் இருந்தனவென்பது என்னைச் சிந்திக்க வைத்தது.
          நானும் எல்லாவகையான புத்தகங்களையும் விரும்பி வாசித்தவன்தான். இப்போது எதனால் இந்தத் தேர்ந்தெடுப்பு என்று யோசித்துப் பார்க்கிறேன். வீணான பொழுது போக்கு நூல்களில் நான் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. நூல்கள் தரும் பொழுது போக்கு அனுபவத்தை விட மேம்பட்ட அனுபவத்தைத் தரும் பல நவீனக் கருவிகள் வந்து விட்டன. எனில் நான் வாசிப்பை அறவே நிறுத்தி விட்டு பொழுது போக்கிற்காக இந்த நவீனக் கருவிகளை மட்டுமே சார்ந்திருக்க முயன்றிருக்க வேண்டும். அவை தரும் இன்பத்தையும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறேன் என்றாலும், வாசிப்பு என்பதை ஒரு நிறைவேறாத ஆசையை நிறைவேற்றத் துடிப்பதைப் போல மனம் நாடிக் கொண்டே இருக்கிறது. இதன் காரணம் என்ன? சிறு பிராயத்திலிருந்தே எழுத்தாளனாக வேண்டும் என்று என் மனதில் விழுந்து விட்ட பொறியின் கங்கு இன்னும் அணையாமலிருப்பதாலா? அதுதான் காரணம் எனில் தேர்ந்தெடுத்த நூல்களை மட்டுமே வாசிக்க விழைவதின் நோக்கம் என்ன? நான் வாசிக்கிற இலக்கிய அறிமுகக் கட்டுரைகளும், விமர்சனக் குறிப்புகளும் இவைதாம் நல்ல ஆக்கங்கள் என்று அறிமுகப்படுத்துபவைகளைக் குருட்டுத்தனமாகத் தேடி வாசிக்கிறேனா? இவ்வாறு சிந்திக்கக் காரணம் நல்ல ஆக்கங்கள் என்று அறியப்படுபவை பெரும்பாலும் பொழுதுபோக்கு ஆக்கங்களோடு ஒப்பிடும்போது வாசிப்பின்பத்தை குறைவாகவே அளிப்பதும், பெரும்பாலும் அவற்றில்  கதை என்பது மெதுவாக, சில சமயம் நகராமலே இருக்கக்கூடிய ஒன்றாகவே இருப்பதும்தான். இருந்தும் இவற்றை வலுக்கட்டாயமாக வாசிப்பதற்கு நானும் ஒரு படைப்பாளியாக வேண்டும் என்ற உந்துதல்தான் முக்கியக் காரணமாக இருக்க வேண்டும்.
          நான் ஏன் படைப்பாளியாக வேண்டும்? அது தரும் புகழுக்காக என்பது சிறு வயதில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது புகழ் ஒரு பொருட்டாக இல்லை. சொல்லப்போனால் மிக உயர்ந்த ஆக்கங்களை அளித்தவர்கள் என்று நான் கருதுகிறவர்கள் புகழாரங்களை விட வசைகளையே அதிகம் பெற்றிருக்கிறார்கள். படைப்பு தரும் இன்பத்துக்காகவா? இதுவரை படைத்ததாக நான் கருதுபவற்றை உருவாக்குகையில் எத்தகைய உயர்ந்த மன எழுச்சியையையும் நான் அடைந்ததாகச் சொல்லிவிட முடியாது. ஒன்றைப் படைப்பதன் மூலம் நான் எதை அடைய விரும்புகிறேன்?
          எனக்கு இந்த வாழ்வும் அது தரும் அனுபவங்களும் விசித்திரமாகப் படுகின்றன. அடுத்த விநாடி என்ன நிகழும் என்ற நிச்சயமற்ற இந்த வாழ்வின் மீது எப்பேர்ப்பட்ட முதலீடுகளெல்லாம் செய்யப்படுகின்றன? நிதமும் சுகம் மட்டுமே விரும்பும் நம் மனதுக்கு இன்பமும், துன்பமும் கலந்த இரட்டைகளின் தொகுப்பாக உள்ள இந்த உலகில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. எனவே ஒரு தேடலைத் துவங்குவது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகி விடுகிறது. நிரந்தரமான இன்பம் மட்டுமே பரிமளிக்கிற, துக்கத்தின் சாயை கூட இல்லாத ஒரு வாழ்வு சாத்தியப்படுமா என்பதே அந்தத் தேடல். நாம் அனைவருமே அந்தத் தேடலில்தான் இருக்கிறோம் என்று கருதுகிறேன். நம் அனுபவ அறிவுக்குட்பட்டுப் பாதைகளை மட்டும் வெவ்வேறாகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். லௌகீகமான பாதைகளைத் தேர்ந்தெடுப்பவர்கள் விரைவிலேயே அது நம்மை இலக்கு நோக்கிக் கொண்டு சேர்க்காது என்பதை அறிந்து சலிப்புற்று விடுகின்றனர். ஆனாலும் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களே உலகில் பெரும்பான்மையாக இருப்பதால், ஒருவித நப்பாசையுடன் அந்தப் பாதையில் தங்கள் பயணத்தைத் தொடரவே செய்கின்றனர். வெகு சிலர் ஆன்மீகத்தைப் பாதையாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இது கடுமையான பாதையாக இருப்பினும், வாழ்வனுபவங்கள் கொடுத்த கசப்புணர்ச்சியின் காரணமாக இப்பாதை தமக்கு நிரந்தர இன்பமளிக்கும் என்று திடமாக நம்புகின்றனர். ஆன்மீகம் என்கிற துறையைச் சுற்றி நாய்க்குடைகள் போல் வளர்ந்துள்ள வணிக நிறுவனங்களின் மத்தியில் உண்மையான வழிகாட்டியையும், சத்தியமான தத்துவத்தையும் அடையாளம் கண்டு கொள்வது கடினமான காரியமாகவே இருக்கிறது. ஆனாலும் நேர்மையான தேடுதல் கொண்ட ஒருவர் சத்தியமாகவே ஒளிர்கிற மெய்ப்பொருளைக் கண்டடைவது திண்ணம். அதற்கு அவசியமானவை எல்லையற்ற பொறுமையும், தேடுதல் தாகம் கொண்ட, விழிப்புற்ற, தூய்மையான மற்றும் உறுதியான மனமுமேயாகும். இக்கட்டுரையின் முக்கிய நோக்கம் ஆன்மீகம் அல்லவாதலால் இவ்விளக்கத்தை இத்தோடு நிறுத்தி வைப்போம்.
          இலக்கியம் என்ற கலை வடிவம் மொழி சார்ந்து இயங்குவதால் அதன் அடிப்படையாக சிந்தனை அமைவது இன்றியமையாததாகிறது. சிந்தனையின் உச்சத்தை அடைந்த மனித மனம் இயல்பாகவே இலக்கியத்தினூடாக மனித வாழ்வின் தரிசனத்தைக் காண விழைகிறது. வேறு கலைகளில் கிடைக்காத இந்த வாய்ப்பு இலக்கியத்தில் கிட்டுவதால் ஆன்ம ஈடேற்றத்தில் ஆர்வம் கொண்ட ஒருவர் இயல்பாகவே இலக்கியத்தை தன் கேள்விகளுக்கு விடைகாண உதவும் ஒரு கருவியாக, வாழ்வு குறித்த தன் தேடலுக்கு ஓர் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விடுகிறார். பிற கலைகளில் ஈடுபடும்போது ஒரு கலைஞனுக்கு ஏற்படும் ஆத்ம திருப்தியையும் தாண்டி, இலக்கியப் படைப்பு படைப்பாளியை அவன் இருக்கும் நிலையினின்றும் மேம்பட்ட ஒரு நிலைக்கு இட்டுச் செல்கின்றது. இதன் காரணம் பற்றியே இலக்கியம் ஒருவரை ஈர்க்கின்றது என்பது எனது துணிபு.
          ஆக ஓர் இலக்கியப் படைப்பு வாழ்வு குறித்த சத்திய தரிசனத்தை அளிக்கவல்லதாக இருப்பின் மட்டுமே அதை ஓர் உயர்ந்த ஆக்கம் என்று கொள்ளலாம். அவ்வகை ஆக்கங்களை வாசிப்பதன் மூலம் மனம் செம்மையும், கூர்மையும் அடைவதோடு மட்டுமின்றி, உயர் நிலைகளுக்குப் பரிணாமமும் அடைகிறது. அத்தகைய முதிர்ச்சி கொண்ட மனம் உலகையும், வாழ்வையும் உள்ளது உள்ளபடி உணரும். நான் நாவல்களில் தேடுவதும் இத்தகைய பண்புகளை என் மனம் பெறுவதற்காகத்தான். என்னதான் தத்துவம் இந்த உலக வாழ்வை மாயை என்று ஒதுக்கி விட்டாலும், இவ்வுலகில்தான் நாம் உடல் கொண்டு திரிய வேண்டியிருக்கிறது. ஞானிகளைப் போல வாழ்வதற்கு முதலில் ஞானியாக வேண்டும். ஞானியாகி விட்டால் உலக வாழ்வு பற்றிய குழப்பம் இல்லை. எனவே வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை முன்னிறுத்தி, அவற்றை விசாரணைக்குட்படுத்தி, அதன் மூலம் நம்மை உயர் தளங்களுக்கு முன்னகர்த்தும் இலக்கியப் படைப்புகள் இந்தத் தேடலில் பேருதவியாக இருக்கும் என்பதே தீர்க்கமான முடிவு.
          ஒரு படைப்பினிடம் நான் யாவற்றை எதிர்பார்க்கிறேன்? அது எனக்கு ஒரு முற்றிலும் புதிய அனுபவத்தைத் தர வேண்டும். அதனூடு செல்லும் என் பயணத்தின் வழி நான் மெய்ப்பொருளை அடையவேண்டும். அல்லது அந்தப் படைப்பு உலகம் அணிந்து கொண்டிருக்கிற போலித்தனமான முகமூடிகளைக் கிழிப்பதோடு, அதன் மீது தீராத கேள்விகளை வீசியெறிந்தபடியே இருக்க வேண்டும். வாசிக்கிற என்னை மேலும் சிந்தனைக்குள்ளாக்கி, உலகின் மீதான என் பார்வையைக் கூர்மைப்படுத்தியபடியே இருக்க வேண்டும். வாசிக்கிற ஒவ்வொரு படைப்பும் மானுட சிந்தனையின் உச்சத்திலிருந்தபடி என்னுடன் உரையாட வேண்டும். இத்தகையதொரு படைப்பையே நான் வாசிக்க விரும்புகிறேன். இதற்காகவே என் முன்னோடிகள் பரிந்துரைக்கிற படைப்புகளின் பின்னே போகிறேன். மெல்ல மெல்ல படைப்புகளுக்கும் எனக்குமிடையிலான கண்ணாடிச் சுவர் உடைந்து, ஒரு நாள் உறவு பலப்படுமென்று திடமாக நம்புகிறேன்.
          வெவ்வெறு தளங்களில் என்னை நானே உயர்த்திக் கொள்ளவும், பல்வேறு பரிமாணங்களில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து நான் பயணப்படவும், எனதும், நான் வசிக்கிற இந்தப் பிரபஞ்சத்தினது மெய்த்தத்துவத்தை விளங்கிக் கொள்ளவும் உதவுகிற படைப்புகளை மனித குலத்தின் மேன்மைக்கென இதுவரையிலும் அளித்திருக்கிற என் முன்னோடிகளுக்கும், என் குருமார்களுக்கும், சக பயணிகளுக்கும் என் இதய பூரவமான நன்றிகள்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை