செனிய் – 2095


இந்தக் கதைகளையெல்லாம் வெளியிடுவதற்கே கூச்சமாக இருக்கிறது. என் இருபது இருபத்தியிரண்டு வயதில் விகடன் குமுதம் போன்ற பத்திரிகைகளுடனும், சுஜாதா, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களுடனும் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. அந்த வாசிப்புப் பழக்கம் கொடுத்த உந்துதலில் இந்தச் சுமாரான கதைகளை எழுதினேன். இப்பொழுது எழுதுவதும் ஏதோ ஒரு படைப்பின் பாதிப்பாகத்தான் நிகழ்கிறது. இருப்பினும் எழுதுதல், வாசித்தல் என்பது ஒரு வியாதியைப் போலவே என்னுள் தொடர்ந்து கொண்டிருப்பதால் அவற்றைக் கைவிடுதல் என் கட்டுப்பாட்டில் இல்லை. குமுதம் ஒரு பக்கக் கதைகளின் சாயலிலேயே இந்தக் கதை அமைந்திருக்கிறது. எப்போது எழுதினேன் என்று குறித்து வைத்திருக்கவில்லை. 96 அல்லது 97 வாக்கில் இருக்கலாம்.
       செனிய் – 2095
       கி.பி. 2095
செனிய் (சென்னை) ஒளி வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஐம்பது மாடிக் கட்டிடங்களில் சாட்டிலைட் ரிசீவர்கள் மூலம் வியாபாரம் நடந்தது. தமிழக முதல்வர் தன் புற ஊதாப் பூனைளுடன் கோடையைக் கழிக்க சனிக்கிரகம் போனார். ஒவ்வொரு வீட்டிற்கும் அரசாங்கம் பிரத்யேக ரேஷன் அமைத்து ரோபாட்கள் உணவுப் பொட்டலங்களைத் துப்பின. மாவட்டத்துக்கொரு நிலா செய்து தொங்க விட்டிருந்தனர். மூன்றாம் வகுப்புக் குழந்தைகள் இன்டக்ரேடட் எலிமினேஷன் ஆஃப் டிஃப்ரன்ஷியேடட் சீரிஸ் பை ஃபொரியர் ட்ரிபிள் மல்டிப்லிகேஷன் மெதடை கணிப்பொறி உதவியுடன் தீர்வு செய்தார்கள். ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குப் பாலிமர் பாலம் ஒன்று போடப்பட்டு ஹைட்ரஜன் லாரிகள் வழுக்கின.
       திவா கீழே இருந்த ரோபோ பெண்ணை தப்பான இடத்தில் தொட்டு, ‘ நிஷா எங்கே?’ என்றான்.
       ‘ நிஷா 27-சி. 10 நிமிடம் 24 விநாடிகளில் வந்து விடுவாள். ’ என்று பதிவு செய்த புன்னகையை வீசினாள் ரோபி.
       பரிணாமத்தின் எச்சமாய் நகம் கடித்தான். அரவம் கேட்க, பார்த்தால் நிஷா.
       ‘ எங் இவ்ள தூர்ம்? ‘ என்றாள்
       ‘ நேத் பூரா ஒன் நெனப்! ப்ட்த்க்லாமா? ’
       ‘ ஒர் நெம்சம். பின்டியே வா. அறல போய் ஆட மாத்கறேன். ’
       அறைக்குப் போனதும் ஆடைகளைக் களைந்து விட்டு,  ‘ முத் குடு. ’
       அவள் அவனது சிந்தடிக் மயிற்கற்றையை விலக்கி, முத் குடுத்தான். அவர்கள் நெருங்கி இன்னும் . . .
       ‘ அடச்சை ! 2095 டிசம்பர் 31 ஆச்சு. இது மாதிரியெல்லாம் ஒரு எளவும் நடக்கலியே! கத எளுதறானாம் கத! பைத்யக்காரப் பயலுக.’ என்றபடி இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் புதினத்தை மற்ற குப்பை நூல்களுடன் சேர்த்துக் கட்டினா ஆறுமுகம் ‘ ஏய் காமாட்சி ! எடைக்குப் போட்டுட்டு வந்துடறேன். வந்து சமைச்சிக்கலாம்.’ என்று நடந்தார் ஆறுமுகம்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை