வழித்தோன்றல்


வழித்தோன்றல்
       மழை நசநசத்துத் தூறிக்கொண்டிருந்தது. மேற்கத்தியத் தோற்கருவிகளின் ஒட்டுமொத்த முழக்கம் போல இடி முழங்கிற்று. அடர்த்தியாய் விரவியிருந்த இருள் நடுவே வேர் பிடித்து ஓடிய ஒரே ஒரு மின்னலில், அந்தத் தெருவில் எல்லாரும் விநாடியில் ஆயிரத்தில் ஒருபாகம் பகலில் இருந்தார்கள். சந்திரமோகன் அந்த மழையில் ரப்பர் செருப்புகள் நடந்தான்.
       தெப்பலாய் நனைந்தும் நிதானமாய் நடந்தான். வீடு வந்ததும் வெளிக்கதவு திறந்து நுழைந்தான். விளக்கு எதுவுமே போட்டிருக்கவில்லை. படுக்கை அறையில் எட்டிப்பார்த்தான். மெத்தையில் போர்வை போர்த்தியபடி மனைவியும், குழந்தையும் படுத்திருப்பது தெரிந்தது. முன்னறை விளக்கைப் போட்டு, கால் கழுவி, லுங்கி மாற்றிக் கொண்டான். அறைக்குள் நுழைந்து மெத்தையில் சாய்ந்து மெலிதான இருட்டில் தடவித் தடவித் தேடிக் கை பற்றுகையில் வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள்.
       தூங்கவில்லை. விழித்துக் கொண்டுதானிருக்கிறாள். பிள்ளையின் உறக்கம் அவன் நெஞ்சுக்குழியின் கர்புர் சத்தத்திலிருந்து தெரிந்தது. இவன் போர்வைக்குள் புக முயற்சித்தபோது, போர்வையை உதறிப் பிள்ளை மேல் போட்டாள்.
       ‘ என்ன, இன்னும் கோவம் போவலியா? ’
       எதிர்முனையில் சற்று நேரம் மௌனம். திடீரென்று நினைத்துக் கொண்டதைப் போல, ‘ அத்தனை பேத்து முன்னால அடிச்சிட்டீங்கல்ல என்னை? ’ என்றாள். பளிச்சென்று இமைகளின் விளிம்பு மயிர்கள் நனைந்தன.
       ‘ பின்னே!  குழந்தையைப் போட்டு அடிச்சால் கோபம் வராதா? நீ எதுக்கு அடிச்சேன்னே தெரியாம மலைச்சுப் போய் நிற்கறான் அவன். கேவலம் பத்து ரூபாய் மருந்து. அதைக் கீழ சிந்தினதுக்குப் போய்க் கன்னத்துல அறையறதா? ’
       ‘ பெத்தவள விட அக்கறையா உங்களுக்கு?’
       ‘ ஐயோ சரோ! நீ அவனுக்குத் தாய். அவனுக்கு வன்முறையிலதான் ஒவ்வொண்ணையும் கத்துத் தரணுமா? இதமா, விவேகமா அவனை வளர்க்கணும் இல்லையா? குழந்தையை வதைக்கிறது பாவமில்லையா?’ அவளைப் பற்றி இழுத்து மன்னிப்புக் கேட்கிற பாவனையில் கூறினான்.
       மேற்கூரையின் ஓட்டு விரிசலின்றும் ஒரு சொட்டு மழைநீர் அவள் இடுப்பில் விழுந்து உடம்பு சிலிர்த்த்து. அவனை விட்டு விலகிப் பிள்ளைப் பக்கம் போனாள்.
       ‘ சரோ,. . . ஏன் இப்படி வெடுக்குன்னு விலகற? நாம சண போடற பாம்புகள்தான். ஆனால் நேரம் வந்தா சாரையாப் பின்னிக்கவும் செய்வோம். ஆனால் அவன் குட்டிப் பாம்பு. தனியா விட்டம்னா வெம்பிருவான். யாராவது ஒருத்தராவது அவனைத் தேற்றணுமில்லையா?’
       ‘ப்ச். . . சும்மா அடுக்காதீங்க. உங்களுக்கு எம்மேல எரிச்சல். அம்மாவை, அப்பாவை இன்சல்ட் பண்ணிட்டாளேன்னு எரிச்சல். அதை இதில காட்டிட்டீங்க.’
       சந்திரமோகன் அமைதியானான். மழி சற்று வலுப்பெற்றிருந்தது.
       ‘ ஆமாம். ரோஷம் வந்ததுதான். ஒத்துக்கறேன். ஆனால் ஒண்ணு சொல்றேன் சரோ. இன்சல்ட்ங்கறதுக்கும் ஒரு அளவிருக்கு. தன்னையொத்த வயது இருக்கறவங்ககிட்ட இன்சல்ட் நடக்கலாம். தப்பில்ல. அது அவங்களத் தூண்டிவிடும். ஆனா நீ எங்க அப்பா, அம்மா, வயசுக்கு மரியாதை தரல.’
       ‘ மெட்ராஸ்லேர்ந்து வந்து கஞ்சி சோறு தின்ன வேண்டியிருக்குன்னு சொன்னியே, அப்பவே பொக்குனு போயிடுச்சு கெழவர் முகம். பாவம் அவர் ஆசைப்பட்டுக் கேட்கிறார்ன்னு அல்வா வாங்கி வந்து குடுத்தேன். அதைப் போய்க் குத்திக் காண்பிக்கிறதா? அதுவும் அவர் முன்னாடியே. எப்பேர்ப்பட்ட மனுஷன் தெரியுமா அவர்? அவர் ரெவின்யூ இன்செக்டரா இருந்தப்ப வீட்டுக்கு மிளகாயும், பருப்பும், தேங்காயுமா வந்து குவியும். நல்லா வாழ்ந்த குடும்பம். எங்க ஆறு பேத்தப் படிக்க வைச்சு ஆளாக்கணும்னே செலவு செஞ்சார் பாவம். ஒண்ணும் சேத்து வைக்கல, எங்கள நம்பி. தான் சாகறதுக்குள்ள எல்லாருக்கும் கல்யாணம் பண்ணிரனும்னு அவசரப்பட்டு இப்ப எல்லாரும் புள்ள குட்டியோட நிக்கறோம், அவருக்கு ஒண்ணும் செய்ய முடியல______,
       ‘________ இன்னொண்ணு சொல்லட்டுமா உனக்கு? எங்க அம்மான்னு சொல்றமே அது எங்க அம்மா இல்ல. இதோட அக்காள்தான் எங்க அம்மா. இது இரண்டாம் தாரம். கடைசிப் பொண்ணு ஒண்ணுதான் இதுக்குப் பொறந்தது. ஒருநாள் அது எங்ககிட்ட இரைஞ்சு பேசி நாங்க பார்த்ததில்ல. கோபம் வந்துட்டா எங்கப்பா முகம் பார்க்கிற கண்ணாடியை எடுத்து வீசுவாரு. இது நகர்ந்துக்கும். கண்ணாடி சுவத்துல பட்டுச் சிதறும். இது வெளக்குமாறு, முறம் எடுத்துட்டு வந்து அள்ளிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி போயிரும். அதுவும் சரி, எங்கப்பாவும் சரி என்னையும், அண்ணன் தம்பிங்களையும் நினைவு தெரிஞ்சு தொட்டதே இல்ல.____’
       ‘_______ சின்ன வயசுல உச்சி வெயில்ல கிரிக்கெட் ஆடப் போனபோது கூட, கூப்பிட்டு உட்கார வச்சு, கிரிக்கெட் குளிர்லதாண்டா விளையாடணும், இப்போ போய் டேபிள் டென்னிஸ் விளையாடுன்னு கிளப்புக்கு அனுப்பிச்சுடுவாரு.____’
       ‘______ ரொம்பச் சின்ன வயசுலயே என்னென்னவோ பொக்கிஷங்களையெல்லாம் எனக்குக் காண்பிச்சுக் கொடுத்தார். ராஜாஜியோட சக்ரவர்த்தித் திருமகன் வச்சுக்கிட்டு உறைஞ்சு போய்ப் படிப்பேன். எனக்கு வன்முறை சொல்லித் தரப்பட்டது அங்கதான். ராமன் மாதிரிதான், அவன் கருணையோடதான் எதிரியைப் பார்க்கணும்னு புரிய வச்சவரு எங்கப்பா. அவர் குணம் எதுவும் இல்ல எங்கிட்ட. நானே படிச்சு, அறிவு தேடி, செல்வம் தேடி என்னை நானே கட்டுமானம் பண்ணிகிட்டதுக்கு என் அம்மா, அப்பா ஒரு காரணம். எனக்கு அருமையான வாழ்க்கை அமைந்திருக்கு. அதுக்கு என் தலைமுறையில் அமைஞ்சுட்ட இதமும், நட்பும் கலந்த வளர்ப்பு ஒரு காரணம். இது என் புள்ளைக்கும் கெடைக்கணும்னு ஆசைப்படறேன். அவன் என்னை விடப் பெரிசா வரணும். இன்னும் வேர்விட்டுப் பரவி உரமா நிக்கணும்_____’
       ‘_______ என் தவிப்பு உனக்குப் புரியுதா சரோ? நான் நல்லா வளர்ந்திருக்கேன். வஞ்சனையில்லாம, எந்தப் பக்கமும் குறுக்கிக்காம, திடமா வளர்ந்திருக்கேன்னா அதுக்கு அப்பா தந்த அறிவும், சித்தியோட இதமும் காரணம். மூத்தாள் பிள்ளைதானே எக்கேடோ கெட்டுப்போன்னு விட்டிருக்க முடியும். ஆனா அப்படி விடாததுக்குக் காரணம் ஒரு உயிர் மேல இருக்கிற அக்கறை. ஒரு மனுஷனை உருவாக்கற ஆர்வம்._____’
       ‘___ இன்னிக்கு நீ உம்புள்ளய அடிச்சயே, அத அவன் லேசில மறக்க மாட்டான். கருவிகிட்டிருப்பான். வளந்து பெரியாளானாலும் அந்த வடு மறையாது. அப்பப்ப கிளறூம், எரியும். அவன் புள்ளைய அவன் வதைக்க ஆரம்பிச்சிடுவான். வேணுமா இந்தக் கொடுமை? உடம்பு நல்லா இருக்க, மனசால அவன ஊனப்படுத்தணுமா? புரிஞ்சிக்க சரோ! என் அப்பா, சித்திய இன்சல்ட் பண்ணிட்டேங்கறதுக்காக கோபம் வந்தது உண்மைதான். ஆனால் நான் உன்னை அடிச்சது குழந்தையைப் போட்டுத் துவைச்சியே அதுக்குத்தான். குழந்தைகளை நம்ப இஷ்டத்துக்கு வளர்க்கக் கூடாது. அவங்களுக்குன்னு புதுசா மூளையும், மனசும் இருக்கு. ஒவ்வொண்ணையும் அவனே தெரிஞ்சிக்கறதுதான் நல்லது. நாம வழிகாட்டலாமே தவிர வழி நடத்தக்கூடாது. ஒரு செடியில் உள்ள பூ யார் சட்டம் போட்டும் பூக்கறதில்ல சரோ. அந்தச் செடியோட இயல்பு அது. ஒரு மொட்டு பூவாகணும்னா ஒவ்வொரு இதழும் விரியற வேதனைய அனுபவிச்சே தீரணும். நிமிண்டி, நிமிண்டி மலர்த்தற பூ வெம்பிடும். . . ‘
       முடித்து விட்டு ஆயாசமாய் விட்டம் பார்த்தான். மழை ஆவேசமாய் அடித்து ஓய்ந்திருந்தது. சரோஜினி மெல்ல நகர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவன், your children are not your children என்கிற கலீல் கிப்ரானின் கவிதை சொன்னான். சரோஜினிக்குக் கலீல் கிப்ரான் தெரியாது. ஆனால் கணவன் என்ற நல்ல தோழனைத் தெரியும். நட்பு இழைகிற இல்லறம் தெரியும். அவன் மார்பில் தலைசாய்த்து மௌனமாய் இமைகள் மூடி இருந்தாள். ஜன்னல் திரைச்சீலை உப்பிக்கொள்ளக் கூதல்காற்று ஆவலாய் உள்ளே எட்டிப்பார்த்தது.
30-08-1993

       

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை