நாணயத்தின் மூன்றாம் பக்கம் - மைக்ரோ நாவல் (2)


பேருந்து பிடித்துச் செல்லலாமா என்று தோன்றிய யோசனையை உடனே கைவிட்டேன். பேருந்து நிறுத்தத்தை அடைய பத்து நிமிடங்களாக நடக்க வேண்டும்; பேருந்துக்காகக் காத்திருப்பது வேறு கணிசமான நேரத்தை எடுத்துக் கொள்ளும்; பவானி பேருந்து நிலையத்திலிருந்து ராமகிருஷ்ணன் தங்கியிருக்கும் இடத்துக்கு செல்லுதலும் அவ்வளவு எளிய விஷயம் அல்ல. வேகமாக நடந்தால் முப்பதிலிருந்து நாற்பது நிமிடங்களுக்குள் அவரை அடைந்து விட முடியும் என்று தீர்மானித்தேன்.
        பவானிக்கும், கொமாரபாளையத்துக்கும் இடையில் காவேரி ஆறு ஓடியது. இந்த இடத்தில் அதற்குக் குறிப்பாக பவானி ஆறு என்றே பெயர். மூன்று பெரிய பாலங்கள் வெவ்வேறு இடங்களில் இரண்டு குறு நகரங்களையும் இணைத்தன. பேருந்து நிலையத்துக்கு அருகிலிருந்த மூன்றாவது பாலம் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. இன்னுந்ன்ந்ம் முறைப்படி திறப்பு விழா நடைபெறாததால், நான்கு சக்கர கனரக வாகனங்கள் இந்தப் பாலத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இரு சக்கர வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தன. கொமாரபாளையத்தின் ஜவுளி நெசவாலை மற்றும் பதனிடும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பவானிக்காரர்கள் இந்தப் பாலத்தைப் போக வர உபயோகிப்பதன் மூலம், தங்கள் பயணச் செலவைக் குறைத்துக் கொண்டார்கள். மேலும் ஈரோட்டில் இருந்து வரும் பேருந்துகள் கொமாரபாளையத்தை அடைவதை விட வேகமாக பவானியை அடைந்தன. எனவே பெரும்பாலான கொமாரபாளையம் மக்கள் ஈரோட்டில் இருந்து பவானி பேருந்து பிடித்து, பவானி வந்து புதுப்பாலம் வழியாக தங்கள் ஊருக்குச் சென்று விடுவார்கள்.
        மாலை ஆறுமணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரிய ஒளி இன்னும் இருக்கும் போதே தெரு விளக்குகளும் எரிய ஆரம்பித்து விட்டதால் பாலத்தைச் சுற்றிலும் ஒரு கிறக்கமான சூழ்நிலை நிலவியது. நான் பாலத்தின் நடைபாதையில் நடந்தபடி, போகப்போக என் வேகத்தை அதிகரித்தபடியிருந்தேன். மாலை நேரத்துக் குளிர் காற்று என் முகத்தைச் செல்லமாக வருடியது. ஆற்றின் பரப்பில் பயணம் செய்தபடி இருப்பதால் காற்றுக்கு ஒரு விநோதமான மிருதுத்தன்மை இருந்தது. தூய காற்றை ஆழமாகச் சுவாசிக்க விரும்பினேன். என் நுரையீரல்களுக்குள் ஒரு டன் காற்றைச் செலுத்தினேன்; புத்துணர்ச்சியுடையவனாகவும், ஓய்வான மனநிலை கொண்டவனாகவும் ஆனேன். மெல்ல என் சுற்றுப்புறத்தை நோட்டம் விடலாமென்ற எண்ணத்தில் வேகத்தைக் குறைத்தேன்.  ஆற்றுக்குள் எட்டிப் பார்த்தேன். ஆற்றுக்குள் நீர் பார்க்கமுடிகிற அதிர்ஷ்டகரமான மாதங்களில் ஒன்று அது. நிறைய பாறைகளை நீர் விழுங்கியிருந்தது. அவற்றின் சிகரங்கள் மட்டும் நீரின் பரப்பில் தெரிந்தன. மறுகரையில் சில பெண்கள் பாறைகளில் துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள்; கொஞ்ச தூரத்திலேயே சில ஆண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். என் பார்வையை விலக்கி பாலத்தைக் கடக்க இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறதென்று கணிக்க முற்பட்டேன். இன்னும் சில நிமிடங்கள் எடுக்கும். மக்கள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த சந்தையிலிருந்து பெண்கள் தலையில் பெரிய கூடைகளைச் சுமந்தபடி ஒரு தீவிர தாள லயத்தோடு நடந்து கொண்டிருந்தார்கள். தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்களும், மாணவிகளும் (அரசு பள்ளிகள் முன்னதாக முடிந்து விடும்) தங்கள் மிதிவண்டிகளை உல்லாசமாக மிதித்துக் கொண்டிருந்தார்கள். பையன்கள் கிரிக்கெட்டையும், திரைப்படத்தையும் உரையாடினார்கள்; பெண்கள் படிப்பையும், திரைப்பட்த்தையும் பற்றி உரையாடினார்கள். பையன்கள் கேட்கும் தொலைவிற்கு அப்பால சென்று விடும் போது, பெண்கள் பையன்களைப் பற்றிப் பேசினார்கள்; பெண்கள் கேட்கும் தொலைவிற்குள் வரும் போது பையன்கள் பெண்களைப் பற்றிப் பேசினார்கள். அவர்களிடத்தில் இளமையின் ததும்பலைக் கண்டு என் உதடுகள் புன்முறுவல் பூத்தன. பாலம் முழுவதும் ஒரே இரைச்சலாக இருந்தது. இரு சக்கர வாகனங்கள் தேவையே இல்லாமல் ஹாரன் ஒலி எழுப்பின; மக்கள் அவசியமின்றிப் பேசிக் கொண்டும், கத்திக் கொண்டும், சபித்துக் கொண்டும், துப்பிக் கொண்டுமிருந்தார்கள். தெருவோர உணவகங்கள் தமிழ்த் திரைப்படப் பாடல்களை சத்தமாக ஒலிபரப்பி, தங்கள் தொழில் துவங்கி விட்டதை அறிவித்தன. பாலத்தின் மறுமுனையை அடைந்த போது, இரண்டு காவலர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி அவற்றின் ஓட்டுனர்களிடம் முறையான உரிமம் இருக்கிறதா என்று பரிசோதித்தபடியிருந்தனர். மாதக்கடைசியாகையால் இது எதிர்பார்த்த ஒரு நிகழ்வுதான். ஒரு மாதத்திற்குக் குறைந்தது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.
        பேருந்து நிலையம் பாலத்தின் முடிவிலேயே இருந்தது. நிலையத்தை அடைந்த உடனேயே அங்கு ஈரோடு செல்லும் பேருந்து ஒன்று நிற்பதைக் கண்டு மகிழ்ந்தேன். இப்போது நான் பேருந்தைப் பிடித்தால், கூடுதுறைக்கு அருகிலிருக்கிற ராமகிருஷ்ணனின் வீட்டை விரைவில் அடைய இயலும். ஓடிச்சென்று பேருந்தில் ஏறினேன். கூடுதுறையை இன்னும் பத்து நிமிடங்களுக்குள் அடைந்து விடலாம். நான் உற்சாகமானேன்.

மேலும்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை